February 14, 2017 தண்டோரா குழு
ஜெயலலிதாவைக் கடந்த 30 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் ஏமாற்றி வந்துள்ளதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா புகார் கூறினார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது:
சொத்துக் குவிப்பு வழக்கு வழக்கில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. சிறைக்குச் செல்ல வேண்டியவர்கள்தான் செல்கிறார்கள். இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி தேர்வு என்பது ஜெயலலிதா விருப்பத்திற்கு மாறாக நடந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் யாரை விரும்பினாரோ அவர்களுக்குப் பதவியை அளிப்பார்கள் என்பது பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தெளிவாகியுள்ளது.
கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம்தான் நடக்கிறது. அவர்கள் யாரை வேண்டுமானாலும் நீக்குவார்கள். யாருக்கு வேண்டுமானாலும் பதவி அளிப்பார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை செய்வார்கள். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலாவைப் பொதுமக்கள் என்றும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
ஜெயலலிதாவைக் கடந்த 30 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் ஏமாற்றி வந்துள்ளார்கள். அம்மாவின் வாரிசுகள் உடன் இணைந்து செயல்படுவதை வரவேற்பதாக கூறியுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நன்றி. விரைவில் எனது திட்டத்தை நான் வெளியிடுவேன்”.
இவ்வாறு தீபா கூறினார்.