February 14, 2017 தண்டோரா குழு
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த அமைச்சர் ‘மாஃபா’ பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி உள்ளிட்ட 18 பேரைக் கட்சியிலிருது நீக்கி, பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
“என்னைக் கட்டாயப்படுத்தித்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார்கள்” என்று தமிழக முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் கடந்த வாரம் அளித்த பரபரப்பான பேட்டியைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. இதனால் அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்துள்ளது.
இதன் பின்னர், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவளிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த அமைச்சர் ‘மாஃபா’ பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட 18 பேரைக் கட்சியிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம், ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்த அதிமுக எம்பிக்கள் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.