February 15, 2017 தண்டோரா குழு
அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது என்று மக்களவைத் துணைத் தலைவரும் அ.தி.மு.க. மூத்த தலைவருமான தம்பிதுரை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
“அ.தி.மு.க.வில் உள்ள எங்கள் (சசிகலா ஆதரவு) அணிக்குப் பெரும்பான்மை உள்ளது. தமிழக சட்டப் பேரவையில் எங்கள் அணி ஆட்சி அமைப்பது உறுதி.
உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும்.
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தற்போது அ.தி.மு.க. கட்சியிலேயே இல்லை. அவரை அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காகச் சென்று பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா உறவினர்கள் டிடிவி தினகரன் மற்றும் மருத்துவர் வெங்கடேஷ் சேர்க்கப்பட்டுள்ளதும், டிடிவி தினகரன் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத் தக்கவை” .
இவ்வாறு தம்பிதுரை கூறியுள்ளார்.