February 15, 2017 தண்டோரா குழு
அ.தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் சகோதரர் டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர்கள் டி.டி.வி. தினகரன், மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோர் அ.தி.மு.க. கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் துணைப்பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நமது எம்.ஜி.ஆர்.’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டிருந்தார்.
அவரது அறிக்கையில், டிடிவி தினகரனும் வெங்கடேஷும் தாங்கள் செய்த தவறுக்காக நேரில் மன்னிப்புக் கடிதம் அளித்ததாகவும், அதனை ஏற்று அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அ.தி.மு.க.விலிருந்த வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூரு நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைகிறார். இந்நிலையில் சசிகலா உறவினர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.