February 15, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
“தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரும் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அழைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அதிகாரம் உள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் இரண்டு அணிகளையும் அழைத்து சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். அதில் அதிக பெரும்பான்மை வைத்துள்ள நபருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும். அதன் பின்னர், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் 2 அல்லது 3 நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்று ஆளுநர் நினைக்கிறாரோ அவரை மட்டும் அழைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது”
இவ்வாறு முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.