February 16, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்றபோது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) எஸ். ராஜேஸ்வரன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு குறித்து நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்கக் கோரி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தின் இறுதி நாளான ஜனவரி 23-ம் தேதி வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
அப்போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில் போராட்டக் குழுவினர் நடத்திய இடத்தினைப் பார்வையிட்டு, காவல் துறையிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் வியாழக்கிழமையும், மதுரையில் வெள்ளிக்கிழமையும் போராட்டக் குழுவினர் போராட்டம் மேற்கொண்ட இடங்களை நேரடியாகப் பார்வையிட்டு பொதுமக்கள், காவல்துறையினரிடம் இது குறித்து கேட்டறிய உள்ளேன்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரிக்க ஏதுவாக தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் இது குறித்து விளம்பரம் செய்ப்பட்டது. அதைத் தொடர்ந்து நேரடியாக விசாரணை செய்து, போராட்டத்தின் போது, நடைபெற்ற செயல்கள் குறித்து கேட்டறிந்துள்ளேன்.இந்த ஆய்வு குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்” .
இவ்வாறு நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் கூறினார்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற கோவை காந்திபுரம் பேருந்து நிலையம், மீனாட்சி திருமண மண்டபம், கொடிசியா வளாகம், சி.ஐ.டி. கல்லூரி வளாகம், ஆகியவற்றையும் ஆய்வு குழுவினர் பார்வையிட்டனர்.