February 17, 2017 தண்டோரா குழு
கடல் வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபர் குஜராத்தின் கட்ச் மாவட்டம் வழியாக இந்தியாவிற்குள் நுழையக் கூடும் என்று குஜராத் காவல்துறையினருக்கு மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
“கட்ச் மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள ஜக்ஹு துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் வரவுள்ளது. ஒரு கப்பலில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் பயணிப்பதாகத் தெரிகிறது” என்று மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
“ ஆந்திரப் பிரதேசம் துறைமுகத்திலிருந்து, ஜக்ஹு துறைமுகம் அருகில் உள்ள சர்வதேச கடல்எல்லைப் பகுதியில் ஒரு கப்பல் வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்த கப்பல் அவ்விடத்தைச் சென்றடைந்ததும், பாகிஸ்தான் நாட்டிலிருந்து வேறு ஒரு கப்பலில் வந்து, ஜக்ஹு துறைமுகம் அருகே நின்று இருந்த கப்பலில் ஏறி ஜக்ஹு துறைமுகத்தை நோக்கி சென்றுள்ளார்.
ஜக்ஹு துறைமுகத்திற்கு மேலும் இரண்டு கப்பல் இன்று இரவு வந்து சேரும் என்று தகவல் கிடைத்துள்ளது. அந்த பாகிஸ்தான் நபர் ஜக்ஹு துறைமுகம் வந்த பிறகு, கட்ச் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அடிபூர் என்னும் இடத்திற்குச் சாலை வழியாகச் செல்லக் கூடும்.
கிடைத்த தகவல்களை கொண்டு, கட்ச் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யுமாறு காவல்துறைக்கு வியாழன் இரவு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிபூர் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகளையும் சோதனை செய்யத் தொடங்கியுள்ளோம். ஆனால் சந்தேகம் படும்படியாக எதுவும் இல்லை” என்று கட்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், ஏ.கே. ஜடேஜா கூறினார்.