February 17, 2017 தண்டோரா குழு
“காவல் துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அமைதியான முறையில் கண்டனம் தெரிவித்து வரும் பொதுமக்கள் போராட காவல்துறை அனுமதிக்க வேண்டும்” என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“தமிழகத்தில் மக்கள் விரும்பாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மக்களால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. அதற்குத் துணை போகும் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்குப் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைதியான முறையில் கண்டனம் தெரிவித்து வரும் பொதுமக்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக அரசுக்கு எதிராக நியாமான கோரிக்கைகளை வைத்து போராடுபவர்களைக் காவல்துறை கைது செய்வது சரியா? காவல் துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அமைதியான முறையில் கண்டனம் தெரிவித்து வரும் பொதுமக்கள் போராடுவதற்கு காவல்துறை அனுமதிக்க வேண்டும். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தின் நிலையை மாற்றி விட வேண்டாம்”
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.