February 18, 2017 தண்டோரா குழு
சென்னை: “தேச விரோதக் கட்சியான திமுக-வை விட சசிகலாவே பரவாயில்லை” என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சசிகலா தரப்பினர் தன்னைக் கட்டாயப்படுத்தி பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர் என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக அவர் போர்க்கொடி எழுப்பினார். இதன் காரணமாக அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி இரு அணிகள் உருவானதுடன் தனித்தனியாக இயங்குகின்றன.
இந்நிலையில், சசிகலா அணி தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றார். பதவியேற்ற அவர் 15 நாட்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்தார்.
அதையடுத்து, சனிக்கிழமை முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கை கோரும் வகையில் வாக்குகெடுப்பு நடத்துவதற்கு சிறப்புப் சட்டபேரவை கூட்டம் கூடியது. ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டு சட்டப் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு அவரது இருக்கை மற்றும் மைக்கை உடைத்தனர்.
இதனால் சட்டப்பேரவையைப் பேரவைத் தலைவர் ஒத்தி வைத்தார். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் “டுவிட்டர்” பக்கத்தில், “திமுக மிகவும் வன்முறை மற்றும் தேசவிரோதக் கட்சி. அதைப்பார்க்கும் போது திமுகவை விட சசிகாலவே பரவாயில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.