February 20, 2017 தண்டோரா குழு
தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. முறையீடு செய்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை வாய் மொழியாக இந்த முறையீடு வைக்கப்பட்டது.
அந்த முறையீட்டில், “சட்டப் பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சட்டப் பேரவைக்குள் காவல் துறையினர் அத்துமீறி நுழைந்தனர். முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளைச் செல்லாதவை என்று அறிவிக்க வேண்டும்”என முறையீடு செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ், “தி.மு.க. வின் முறையீடு மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் செவ்வாய்க்கிழமை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்கப்படும்” என்றார்.