February 20, 2017 தண்டோரா குழு
மும்பை சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் சர்வதேச வான் எல்லையில் பறந்துகொண்டிருந்தபோது, தரைக் கட்டுப்பாட்டுடன் தகவல் தொடர்பைச் சில நிமிடம் இழந்தது.எனினும், ஜெர்மனி நாட்டின் போர் விமானங்களின் உதவியுடன் பாதுகாப்பாக எவ்வித சம்பவமும் இல்லாமல் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விமானி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் விமானம் மும்பை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3௦௦ பயணிகளை ஏற்றிக்கொண்டு மும்பை லண்டன் நோக்கி பயணித்தது. ஜெர்மனி நாட்டின் வான்வெளியில் சென்றுக்கொண்டு இருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஒரு வேளை விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டது.
சமூக வலைதளமான ‘ஏவியேஷன் ஹெரல்ட்’ வெளியிட்ட செய்தியில், “ஸ்லோவாக்கியா நாட்டின் மீது பறந்துகொண்டிருந்தபோது அந்நாட்டு தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பு இருந்தது. பின்னர், செக் நாட்டின் ப்ராக் நகரின் மீது பறந்தபோது, அத்தொடர்பு இல்லை. இதனால் கவலை ஏற்பட்டது. ஆனால், விமானி தரைக்கட்டுப்பாட்டுக்கான சரியான அலைவரிசைத் தொடர்பை இயக்கத் தவறியதால் இந்தக் குழப்பம் நேர்ந்தது” என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் அதிகாரி கூறுகையில்,
“ஜெர்மனி வான்வெளியின் அருகே பறந்து கொண்டு இருந்தபோது, இந்த சம்பவம் நடந்தது. பாதுகாப்பு கருதி ஜெர்மன் போர் விமானங்கள் உடனே உதவிக்கு வந்து பாதுகாப்பு அளித்தனர். சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் மீண்டும் தொடர்பு கிடைத்தது. பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த போயிங் 777 விமானம் லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது” என்றார்.
இச்சம்பவம் பிப்ரவரி 16ம் தேதி நடந்துள்ளது. இச்சம்பவத்தின் காணொளி பிப்ரவரி 2௦ம் தேதி தான் சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஏவியேஷன் ஹெரல்ட்’ என்னும் சமூக வலைதளத்தில் போயிங் 777 விமானத்தை இரண்டு ஜெர்மன் போர் விமானங்கள் பாதுகாப்புக்காகச் செல்வது போன்ற காணொளி பதிவாகியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “2௦17, பிப்ரவரி 16, மும்பையில் இருந்து லண்டன் ஹீத்ரோவ் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணமான ஜெட் ஏர்வேஸ் 9W 118 ஜெர்மன் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது உள்ளூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுயுடன் (ஏடிசி) தொடர்பு துண்டிக்கப்பட்டது. நல்ல வேளையாக சிறிது நேரத்தில் தொடர்பு மீண்டும் கிடைத்துவிட்டது.
விமானம் பாதுகாப்பாக இருக்க ஜெர்மன் விமான படை தனது இரண்டு போர் விமானங்களை அனுப்பி தரையிறங்க உதவியது. அதில் பயணித்த 33௦ பயணிகள் மற்றும் விமான பணியில் இருந்த 15 பேரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறங்கினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் (டிஜிசிஏ) அதிகாரிகளுக்கும், ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெட் ஏர்வேஸ் 9W 118 விமானத்தில் இருந்த 15 விமான பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.