February 21, 2017 தண்டோரா குழு
உள்ளாட்சித் தேர்தலை வரும் மே 14-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடஒதுக்கீட்டு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என தி.மு.க. அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து , மாநில தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை நடைபெற்றபோது, தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் “உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடுவதிலேயே மாநில தலைமைத் தேர்தல் ஆணையம் ஆர்வமாக இரு” என்று கூறி, கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும், உறுதியான தேர்தல் தேதியைத் தெரிவிக்கும்படி, மாநில தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை செவ்வாய்க்கிழமை தள்ளிவைத்தது.
அதனையடுத்து வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மே 15-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என மாநில தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தமிழகத்தில் மே 14-க்குள் உள்ளாட்சித் தோ்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.