February 21, 2017 தண்டோரா குழு
முப்பது ஆண்டுகளாகப் பணிக்கொடை (Gratuity) வழங்காத தனியார் நிறுவனத்தைக் கண்டித்து அந்நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் செயல்பட்டு வந்த “நவ இந்தியா” நிறுவனம், நிர்வாகக் குறைபாடு காரணமாகச் சில வருடங்களுக்கு மூடப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இதுவரை வழங்க வேண்டிய பணிக்கொடை வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தொடர்ந்து போராடி வலியுறுத்தி வந்தனர்.
இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் ஊழியர்களுக்கு 50 சதவீதம் பணிக்கொடை வழங்கப்பட்டது. அதன் பிறகு வழங்க வேண்டிய மீதித் தொகையை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை.
ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய மீதித் தொகையை வழங்காமல் நிறுவனம் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“நவ இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய 180 ஊழியர்களுக்கு இதுவரை முழுமையான பணிக்கொடை வழங்கவில்லை. அதில், சில ஊழியர்கள் தற்போது இறந்துவிட்டனர். எனவே, அவர்களுக்குத் தரவேண்டிய தொகையை அவர்களது குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும்.
“நவ இந்தியா” நிறுவனம் கோரிக்கைகளை உடனடியாக ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க இருக்கிறோம்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷமிட்டனர்.