February 21, 2017 தண்டோரா குழு
கோவையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் இது வரை 34 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோவை பாப்பகாய்ச்சன் பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் . இவர் சில தினங்களுக்கு முன் உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்குப் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
கடந்த சில தினங்களாக கோவையில் பல்வேறு பகுதியிலிருந்து பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 34 பேரும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 7 பேரும், மர்ம காய்ச்சல் காரணமாக 24 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 17 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் பலியாயினர். கடந்த ஒரே வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“அண்மைக் காலமாக கோவையில் மர்மமான காய்ச்சல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திடீரென காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்” என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.