February 21, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின் அரசியல் குறித்து தங்கள் வெளிப்படையான கருத்துகளை திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இதில் அரசியல் அரங்கில் தனது கருத்துகளை ‘ட்விட்டர்’ பக்கத்தில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
இதற்கிடையில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், தமிழர்களையும் அவதூறான சொல்லில் விமர்சித்து வந்தார். அதைத் தொடர்ந்து கமல்ஹாசன், “நான் சிலரைப் போல் தில்லி வரை சென்று பொறுக்கவில்லை” என்று பதில் கொடுத்தார். அப்போது, கமலையும் ‘பொறுக்கி’ என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்தார்.
அதற்குப் பதிலளித்த கமல், “சுவாமியின் கேவலமான பதிவுகளுக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை. காமராஜ், அண்ணா, ராஜாஜி எல்லாம் நீ சொன்ன ‘பொறுக்கி’ இனத்தில் இணையற்ற தலைவர்கள். மோதி மிதித்துவிடு பாப்பா….” என்று கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குறித்தும் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற்றது குறித்தும், கமல் மறைமுகமாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், ‘ட்விட்டர்’ பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமியிடம் ஒருவர், “கமலை எப்படியாவது பாஜகவில் இணைத்துவிடுங்கள்” என்று கூறினார்.
அதற்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, “கமல்ஹாசன் என்ற முதுகெலும்பு இல்லாத கோழையை, சுயதம்பட்ட முட்டாளைக் கடுமையாக எதிர்க்கிறேன்” என்றார்.
அதற்குப் பதிலலளித்த கமல் தனது, ‘ட்விட்டர்’ பக்கத்தில், “சுவாமி சொல்லும் கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன். அவரை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக, முரட்டுத்தனமாக நான் பதில் சொல்ல மாட்டேன். அரசியலில் அவர் மிகுந்த அனுபவசாலியாக இருக்கலாம். அவர் எலும்பில்லாத உணவுகளை விரும்பலாம். ஆனால், நான் அப்படி இல்லை” என்று கூறியுள்ளார்.