February 22, 2017 தண்டோரா குழு
“புதிய ரூ.1000 நோட்டுகளை வெளியிடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை” என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
புதிய 1000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியானது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.
“ரூ.1000 நோட்டுகளைப் புதிதாக வெளியிடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. 500 ரூபாய் மற்றும் அதை விட குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பணி மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார் அவர்.
“ஏ.டி.எம். மையங்களில் இன்னமும் பணத் தட்டுப்பாடு இருப்பதாகப் புகார் வருகிறது. மக்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை மட்டும் ஏ.டி.எம். மையத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே நபர் ஒரே சமயம் அதிகமான பணத்தை எடுத்தால் மற்றவர்கள் எடுப்பதற்கு இயந்திரத்தில் போதிய பணம் இருக்காது. நிலைமை முழுமையாகச் சீராகும் வரையில் தேவையான பணத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்” என்றும் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டார்.