February 22, 2017 தண்டோரா குழு'
“தி.மு.க.வின் போராட்டத்துக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். தமிழக மக்கள் ஜனநாயக விரோத முறையில் வந்துள்ள அ.தி.மு.க. அரசைத் தூக்கி எறிவார்கள்” என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு புதன்கிழமை பேசியதாவது;
“தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற சம்பவங்கள் ஜனநாயக படுகொலையாகும். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு சட்டப் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தும் அதனை அவர் நிராகரித்துவிட்டார்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினால் அதை ஏற்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. எதிர்க்கட்சிகளை வெளியே அனுப்பி விட்டு, வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது .இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு வெற்றி பெறும்.
தி.மு.க.வின் போராட்டத்துக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். தமிழக மக்கள் ஜனநாயக விரோத முறையில் வந்துள்ள அ.தி.மு.க. அரசை தூக்கி எறிவார்கள்”
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.