February 22, 2017 தண்டோரா குழு
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திருப்பதி கோவிலில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
திருப்பதி வெங்கடாசலபதி ஆலையத்திற்குப் புதன்கிழமை வந்து தரிசனம் செய்த அவர், தனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் இக்காணிக்கையைச் செலுத்தியிருக்கிறார்.
முன்னதாக சிறப்பு விமானத்தில் தனது உறவினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலருடன் அவர் திருப்பதிக்கு செவ்வாய்க்கிவமை இரவு வந்தார் சந்திரசேகர ராவ்.
“சாலிகிராம் ஆரம் எனப்படும் தங்கம், சாலிகிராம மாலை, “மகர கண்டாபரணம்” எனப்படும் பல தங்க அடுக்கு கொண்ட நெக்லஸ் ஆகியவற்றைக் காணிக்கையாக அளித்தார். அவற்றின் மொத்த எடை 19 கிலோ ஆகும். விலை மதிப்பு ரூ. 5 கோடி” என்று திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் டி. சாம்பசிவ ராவ் தெரிவித்தார் என பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
நாடு விடுதலை அடைந்து, ஒரு மாநில அரசு செலுத்தும் அதிகபட்ச மதிப்புள்ள காணிக்கையாகும்.
காணிக்கையைச் செலுத்திய பிறகு, அவருக்கு ஆலய வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் பட்டு வஸ்திரம், பிரசாதம் ஆகியவற்றுடன் புரோகிதர்கள் மந்திரம் ஓத மரியாதை அளிக்கப்பட்டது.
பிறகு, திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் சன்னதிக்கும் சென்று வழிபட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், ஆலய வழிபாட்டுக்குப் பின் தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் ஆலயத்திற்கு வந்து வழிபட்டதாகவும் காணிக்கை செலுத்தியதாகவும் தெரிவித்தார்.