February 24, 2017 தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் திருவானைக்காவல் கோவிலுக்குச் சொந்தமான யானை தாக்கியதில் பாகன் படுகாயம் அடைந்தார். அவர் தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் இந்து அறநிலையத் துறை சார்பில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முகாமில் பங்கேற்பதற்காகத் தமிழகத்திலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட கோவில் யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.
யானைகளுக்குத் தினமும் காலை மாலை என இரு தடவை நடைப்பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. புதன்கிழமை மாலையில் வழக்கம் போல் நடைப்பயிற்சி செல்ல திருச்செந்தூர் மற்றும் திருவானைக்காவல் கோவில் யானைகள் அழைத்து செல்லப்பட்டன.
யானைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்த போது, “தெய்வானை” என அழைக்கப்படும் திருச்செந்தூர் யானை திடீரென மிரண்டு, முன்னால் சென்று கொண்டிருந்த திருவானைக்காவல் கோவில் யானையின் பாகன் ஐம்புநாதனைத் தாக்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக யானை பாகன்கள் அந்த யானையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். காயமடைந்த பாகன் ஐம்புநாதனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேரத்தனர். உடலில் உள் காயங்கள் அதிக அளவில் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயர் சிகிச்சைக்காக வியாழக்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யானைகள் புத்துணர்வு முகாமில் ஏற்பட்ட இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.