February 24, 2017
தண்டோரா குழு
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க ரூ.15 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதியதில், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதனால், எண்ணூர் மற்றும் அதன் சுற்றுப்புறக் கடல் பரப்பில் பெரும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு மீன்வளம் குறைந்ததோடு, அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் ரூ.75 லட்சம் மதிப்பில் எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் மீன்சந்தைகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.