February 24, 2017 தண்டோரா குழு
“அதிமுக கட்சியின் தலைமைப் பதவிக்கு வி.கே. சசிகலாவின் குடும்பத்தினர் வருவதைக் கட்சியின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்” என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கருத்து தெரிவித்தார்.
“அதிமுக தலைமையை ஏற்கும் தகுதி ஓ. பன்னீர்செல்வத்துக்குத்தான் இருக்கிறது. டி.டி.வி. தினகரனுக்கு இல்லை” என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளை சசிகலாவுடன் இணைந்து செய்தவர் தீபக். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
அவரது பேட்டி வருமாறு:
பன்னீர்செல்வம் எந்தப் பதவியையும் கேட்கக் கூடியவர் அல்ல. சசிகலாவை இப்போதும் மதிக்கிறேன். அதே சமயம், சசிகலாவின் குடும்பத்தினர் அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வருவதை அதிமுகவின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். கட்சியில் தினகரனுக்கும், வெங்கடேஷுக்கும் பெரிய பொறுப்புகளைக் கொடுத்ததை அதிமுகவினர் யாரும் ஏற்க மாட்டார்கள்.
அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி ஓ. பன்னீர்செல்வத்துக்குத்தான் உள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு இல்லை. எனது சகோதரி ஜெ. தீபா கூட அந்தப் பதவியை அடைவதற்கு விரும்பலாம்.
ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு மீண்டும் திரும்ப வேண்டும். எந்த நிலையிலும் அதிமுக உடையக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதிமுக உடைந்தால், திமுக ஆட்சியைப் பிடித்துவிடும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய அபராத தொகையான ரூ.100 கோடியைச் செலுத்துவதற்கு 3 மாதம் அவகாசம் கேட்க இருக்கிறோம். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஜெயலலிதாவின் சொத்துகளை விற்று அந்தப் பணத்தைச் செலுத்துவோம்.எந்தச் சொத்துகளை விற்போம் என்று இப்போது கூற முடியாது. நிச்சயம் போயஸ் தோட்டம் இல்லத்தை விற்கமாட்டேன்.
போயஸ் தோட்ட இல்லம் எங்களுடைய பாட்டி வழியில் வருவதாகும். அந்த இல்லம் எனக்கும் தீபாவுக்கும்தான் சொந்தம். வேறு யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. இதற்காக சட்ட ரீதியாக அணுகப் போவதில்லை. சசிகலாவே அந்த இல்லத்தை எங்களிடம் ஒப்படைப்பார்.
சசிகலா எங்கள் அம்மாவைப் போன்றவர். அதனால்தான் பெங்களூரில் சிறையில் உள்ள அவரை நேரில் சந்தித்துப் பார்த்து வந்தேன். போயஸ் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை.
தீபாவுடன் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அரசியலில் அவர் பங்கேற்பது அவர் விருப்பம். ஆனால், எனக்கு அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை. குடும்ப அரசியல் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை”
இவ்வாறு தீபக் பேட்டி அளித்தார்.
சசிகலாவின் ஆதரவாளராக ஜெ. தீபக் இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் கூவத்தூரில் அதிமுகவின் எம்.எல்.ஏ.கள் தங்கியிருந்தபோது, அங்கும் சென்று வந்தார். பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரனுடன் சந்தித்தார். இந்த நிலையில் இப்படி தீபக் பேட்டி அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.