February 27, 2017 தண்டோரா குழு
நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் என்றால், தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“பொது விநியோகத் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாய விலை கடைகளில் வழங்காமல் இருக்கும் தமிழக அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல் வாரத்தில் கிடைக்கும் சில அத்தியாவசியப் பொருட்கள் கூட இரண்டாவது வாரத்தில் கிடைப்பதில்லை என்ற அவல நிலை தமிழகத்தின் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தொடருகிறது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், “ஒரு நியாயவிலைக் கடையில் 1000 குடும்ப அட்டைகள் இருந்தால், 400 அட்டைகளுக்கு மட்டுமே பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
நியாயவிலைக் கடைகளுக்கு 100 சதவீதம் பொருட்கள் சப்ளை, அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்து, எடை குறையாமல் கடைகளுக்குப் பொருட்கள் அனுப்பினால் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பொது விநியோகத் திட்டம் எந்த அளவுக்கு மோசமாக செயல்படுத்தப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
ஆகவே “பினாமி ஆட்சியின்” அமைச்சர்கள், குற்றவாளிகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்து, அடித்தட்டு மக்களை வாழ வைக்கும் பொது விநியோகத் திட்டத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகளுக்கு முறையாக, முழுமையாக அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தால், திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்”.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.