February 27, 2017 தண்டோரா குழு
ஆமை முயல் பற்றிய கதை அனைவரும் அறிந்தது. கதையில் இரண்டுக்கும் இடையே போட்டியும், பொறாமையும் இருந்திருக்கும். ஆனால், நிஜத்தில் எல்லா ஜீவராசிகளும் அவ்வாறே இருந்ததில்லை. ஒரு சில மனிதர்களுக் கிடையே இருக்கும் தவறான குணம் எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது.
அமெரிக்காவின் தென் மேற்கு மாநிலமான அரிசோனாவில் உள்ள டவ் மலை பகுதியில் பிரபல 5 நட்சத்திர விடுதியான ரிட்ஸ் கார்ல்டன் ஓய்வு விடுதி அமைந்துள்ளது.
பிறந்து இரண்டு வாரமேயான ஒரு சிறிய பாலைவன பருத்தி வால் முயல் அந்த விடுதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்து, அங்கிருந்த ஆமையின் வீட்டிற்குள் சென்றுவிட்டது.
ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ‘வேம்பா’ என்னும் ஆமையைப் பராமரித்து வரும் பிரின்க் என்பவர் அந்த பருத்திவால் முயலைக் கண்டுபிடித்துள்ளார்.
“மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அந்த முயலின் தலையைச் சுற்றி புல்லும் களைகளும் இருந்தன. நான்கு அடுக்கு தாவர வகைகள் அதனுடைய உடலைச் சுற்றி இறுக்கமாக சுற்றியிருந்தது.
எப்பொழுதும் போல் ஆமை இருக்கும் வீட்டிற்குச் சென்று அதைப் பராமரிக்க காலையில் செல்வேன். அவ்வாறு சென்று பார்த்தபோது ஆமையும் முயலும் கட்டியணைத்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரே இரவின் பாசப்பிணைப்பு காணப்பட்டது.
வன அதிகாரிகள் முயலின் கழுத்தைச் சுற்றியுள்ள தாவரக் குப்பைகளை எடுத்துவிட்டு அதைச் சுத்தம் செய்வதற்காக வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோது, அவர்களுடைய செயலைக் கண்டு வேம்பா உடனே பதிலளித்தது. தன்னுடைய நண்பனுக்கு மென்மையான கவனிப்பைத் தர வேண்டும் என்று சொல்வதைப் போல் சத்தத்தை எழுப்பியது” என்று பிரின்க் தெரிவித்தார்.