February 28, 2017 தண்டோரா குழு
ஆப்கானிஸ்தான் நாட்டின் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் தன்னுடன் பணியாற்றிய 11 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, போலீஸ் வாகனத்தில் தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) இரவு நடந்திருக்கிறது.
இது குறித்து ஆப்கான் அதிகாரிகள் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் ஹெல்மன்ட் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் தன்னுடன் பணியிலிருந்த 11 பேரைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்” என்றனர்.
ஹெல்மன்ட் மாகணத்தின் ஆளுநர் அலுவக செய்தித் தொடர்பாளர் ஓமர் ஜ்வாக் கூறுகையில்,
“அந்த மாகாணத்தின் தலைநகரான லஷ்கர் காஹ்வில் திங்கள்கிழமை இரவு தன்னுடன் இருந்த சக ஊழியர் 11 பேரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவர்களைத் தாக்கிய பிறகு, அவர்களிடம் இருந்த துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் துறை வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.அவர் ஒருவேளை தலிபான்களுடன் சேர்ந்து கொள்வதற்காக இவ்வாறு செய்திருப்பார் என்று கருதப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
“துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான 11 காவல்துறை அதிகாரிகள் லஷ்கர் காஹ் மருத்துவமனைக்குக் குண்டு காயங்களுடன் கொண்டு வரப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 11 பேரும் உயிரிழந்தனர்” என்று டாக்டர் தின் முஹமத் கூறினார்.
இந்தச் சம்பவத்துக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தானில் இது போன்ற பல தாக்குதல்கள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.