March 1, 2017 தண்டோரா குழு
கோவை மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்ப நிலையத்தில் ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சிறப்பு விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன் முன்னிலையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சிறப்பு விற்பனையை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் கைக்குட்டை முதல் பட்டுப் புடவை வரை அனைத்து ரகங்களுக்கும் பொருந்தும்.
இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் கைவண்ணத்தில் உருவான பருத்திச் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு வகைகள் பருத்தி சட்டைகள், ஸ்லப் சட்டைகள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக கோ-ஆப்டெகஸில் தருவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் கோவை மண்டலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 257.98 இலட்சம் மதிப்புக்கு ஆடைகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது ரூ.350 இலட்சம் அளவுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜா, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுரேஷ்குமார் , கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.