March 2, 2017 தண்டோரா குழு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டார். அதன் பிறகே சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என அப்பல்லோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க மூத்த தலைவர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது;
“ சென்னை உயர் நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அண்மையில் அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் டிஸ்சார்ஜ் அறிக்கையும் இடம் பெற்றுள்ளது. அதில் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டார். அதன் பிறகே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தங்கியிருந்த போயஸ் கார்டன் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அப்பல்லோ மருத்துவமனையிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆனால் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சைக்காக சேர்ந்த பிறகு, 27 கண்காணிப்பு கேமராக்கள் அங்கு அகற்றப்பட்டுள்ளன. எனவே, போயஸ் கார்டன் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிர் இயற்கையாக பிரியும் வகையில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை நிறுத்த அனுமதி அளித்தவர் யார்? குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர் அந்த அனுமதி அளித்தது ஏன்?
2016-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில், சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சேர்க்க வசதியாக, சென்னைக்கு பாரா ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை அனுப்பியதாக மத்திய அரசின் ரகசிய தகவல் கூறுகிறது. ஆனால் ஜெயலலிதா சிங்கப்பூர் செல்லவில்லை அப்படியானால் அந்த முயற்சியை தடுத்தது யார்? ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கையை இன்னும் மத்திய அரசு வெளியிடாதது ஏன்?”.
இவ்வாறு பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.