March 2, 2017 தண்டோரா குழு
தனியார் நிறுவனம் குளிர்பானம் தயாரிப்பதற்காக தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. பரமசிவம் மற்றும் அப்பாவு என்ற இருவர் சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பானம் தயாரிப்பதற்காக தண்ணீர் எடுப்பதற்கு ஒரு தனியார் குளிர்பான நிறுவனத்துக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.
“தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோடைக் காலத்தில் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும். பாசன பருவ சாகுபடிக்குத் தேவைப்படும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் நடைபெறாத நிலை ஏற்படும். எனவே, தண்ணீர் எடுக்க தனியார் குளிர்பான நிறுவனத்துக்கு அனுமதி தரக் கூடாது” எனக் கூறி பரமசிவம் மற்றும் அப்பாவு ஆகியோர் மனு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.விசாரணையில் நீதிபதிகள் கூறுகையில், “தாமிரபரணி ஆற்றிலிருந்து முறையாக அனுமதி பெற்றே குளிர்பானம் தயாரிக்கப்படுகிறது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே, குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்றனர்.
முன்னதாக குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தடை நீங்கியுள்ளது.