March 2, 2017 தண்டோரா குழு
நரம்பு பாதிப்பு சிகிச்சை சங்கத்தின் இரண்டாம் ஆண்டு சர்வதேச மாநாடு கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்.சி.எச்.) மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கியது.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர்கள், சமீப ஆண்டுகளாக ரேடியோலஜி தொழில்நுட்ப இடையீட்டு (Interventional Radiology Technology) மருத்துவ முறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கதிர்வீச்சியல் மற்றும் இடையீட்டியல் துறை (Department of Interventional Radiology Technology) தலைவர் டாக்டர் மாத்யு செரியன் ஒருங்கிணைப்பில் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் தொடங்கிய இந்த மாநாடு சனிக்கிழமை வரை நடைபெறும்.
இந்த மாநாட்டில் சர்வதேச சூழலுக்கு ஏற்ப தகவல்களை அறிந்தும், அறிந்தவற்றைப் பிற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொண்டும் சிகிச்சை மேற்கொள்ள பிற மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
“இந்தியாவில் மட்டும் மூளை ரத்தக்குழாயில் உண்டாகும் கட்டியால் ஏற்படும் பக்கவாதத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதம் ஏற்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் இந்த ரத்தக் குழாய் அடைப்பை நீக்கி வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டால் அவர்கள் குணமடைவார்கள் “ என்று மாநாட்டில் பங்கேற்ற மருத்துவர் சந்தோஷ் ஜோசப் தெரிவித்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சர்வேதச அளவில் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். நரம்பியல் கதிவீர்ச்சில் நிபுணத்துவம் பெற்ற 50 இந்திய மருத்துவர்கள், நரம்பியல் பிரிவு விரிவுரையாளர்களும் பங்கேற்று மாநாட்டில் பயிற்சி அளித்து வருகின்றனர். ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.