March 3, 2017 தண்டோரா குழு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வரும் வரை போரட்டம் தொடரும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
“முதலமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எனக்குப் பல தரப்பிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. பல வகையில் அவமதிக்கப்பட்டேன். அதனால், நானாகவே விலகிவிடுவேன் என்று எதிர்பார்த்தார்கள்.
நெருக்கடியின் பேரில் நான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை நடைமுறைகள் எனக்கு மிகவும் வேதனை அளித்தன.
அவரை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க முடியுமா என்றும் அதற்கேற்ப அவரது உடல்நிலை இருக்கிறதா என்றும் கேட்டேன். எதற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவும் இல்லை. அம்மாவுக்குத் தீராத நோய் எதுவும் இல்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் தமிழக மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியே கொண்டு வரும் வரை போரட்டம் தொடரும். அதற்கான முதல் படியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறோம். அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தீரும் வரை நாங்கள் மேற்கொண்டுள்ள தர்ம யுத்தம் தொடரும்”.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.