March 4, 2017 தண்டோரா குழு
வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க்(எஸ்.பி.ஐ.) அறிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.பி.ஐ. சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“பெருநகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 -மும், நகர்ப்புறங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.3000-மும், புறநகர் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2000-மும், கிராமப்புறங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1000- மும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படம். இந்த முறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்த அபராத தொகை, குறைந்த பட்ச இருப்பு தொகையை விட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் ரூ.75 மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.50 உடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். ஏ.டி.எம். இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்”.
இவ்வாறு எஸ்.பி.ஐ கூறியுள்ளது.