March 6, 2017 தண்டோரா குழு
பரிசுப்பொருள் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அப்போதைய அமைச்சர் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
ஜெயலலிதா 1992ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது, அவர் தன் பிறந்த நாளைச் சிறப்புடன் கொண்டாடினார். அவருக்குப் பல பரிசுகள், காசோலைகள், வரைவோலைகள் (டி.டி.) பரிசாக வந்தன. அவருக்கு வந்த பரிசு பொருட்களுடைய மதிப்பு மொத்தம் 2 கோடி ரூபாயாகும்.
ஒரு முதல்வருக்கு வரும் பரிசுத் தொகை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், அவர் அதை அவ்வாறு சேர்க்காமல், தன்னுடைய சொந்த வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார். இது தொடர்பாக ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மார்ச் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவும் அப்போது அமைச்சராக இருந்த அழகு திருநாவுக்கரசுவும் இறந்துவிட்டனர். இதனால், அவர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் மீதான வழக்கு கோடை விடுமுறை காலத்திற்குப் பிறகு விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.