March 6, 2017 தண்டோரா குழு
சமூக வலைத்தளமான ஃபேஸ் புக் மெசஞ்சர் அப்ளிகேஷனில் ’டிஸ்லைக்’ பட்டன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபேஸ் புக் சமூக வலைதளம் உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் ஃபேஸ் புக் கவர்ந்துள்ளது. அந்நிறுவனமும் பயனாளர்களுக்கு ஏற்ப பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகள், செய்திகள், புகைப்படங்களுக்கு நமது உணர்வுகளைத் தெரிவிக்கும் விதத்தில் ’ரியாக்ஷன்’ பட்டன்களைக் கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது ஃபேஸ் புக் நிறுவனம். இது இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதியில் ஃபேஸ் புக் சில புதிய ‘ஸ்மைலி’களை அறிமுகப்படுத்தவுள்ளது.
அதன்படி, பல ஆண்டுகாலமாக வெறும் “லைக்” பட்டனை மட்டுமே கொண்டிருந்த ஃபேஸ் புக்கில் ’டிஸ்லைக்’ பட்டன் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கான ஸ்மைலி’யை ஃபேஸ் புக் மெசஞ்சரில் அந்நிறுவனம் சோதித்து வருகிறதாம். இச்சோதனை வெற்றி பெற்றால், அடுத்த சில மாதங்களில் ஃபேஸ் புக்கிலும் ‘டிஸ்லைக்’ பட்டனை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 300 பில்லியன் பேர் ’ரியாக்ஷன்’ பட்டனை பயன்படுத்தியுள்ளதாக ஃபேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.