March 7, 2017 தண்டோரா குழு
மீனவர் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுக்கப்படும் என்று தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோ குடும்பத்தினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று செவ்வாய்கிழமை ஆறுதல் கூறினர்.
அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் தமிழக (ராமேஸ்வரம்) மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி கிடைத்தது. தமிழக மீனவர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கண்டிக்கதக்கது.
மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து மீனவர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள்.
நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் தமிழக மீனவர்களின் வேதனையைத் தெரிவிப்பார்கள். பல நூறு ஆண்டுகளாக கச்சத் தீவில் தமிழர்கள் மீன்பிடித்துக் கொண்டுதான் இருந்தனர். இந்த பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண கச்சத் தீவை மீட்டே தீருவோம்”.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.