March 8, 2017 தண்டோரா குழு
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் படி மத்திய அரசை வலியூறுத்தி கேட்டுள்ளோம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
நீட் நுழைவு தேர்வு இந்த ஆண்டு மே 8 -ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் தில்லி சென்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா ஆகியோரை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
“மருத்துவ படிப்பில் சேர்வதற்கு எழுதப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதலை பெற்றுத்தரும்படி மத்திய அரசை வலியூறுத்தி கேட்டு வருகிறோம். தமிழகத்தில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் தமிழக அரசின் பாடத்திட்டமான உயிரியல் பாடம் படித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 3,000 மாணவர்கள் தான் படிக்கின்றனர்.
இந்த இரண்டு பாட திட்டங்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும்படி கேட்டுள்ளோம். நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.