March 9, 2017 தண்டோரா குழு
மலிவு விலை நாப்கின் கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கை பாலிவுட்டில் திரைப்படமாகிறது.
அருணாசலம் முருகானந்தம் என்பவர் குறைந்த விலை மற்றும் சுகாதாரமான சானிட்டரி நாப்கின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அவருடைய இந்தக் கண்டுபிடிப்பு கிராமங்களில் வசிக்கும் பெண்கள் கடைப்பிடிக்கும் சுகாராமற்ற செயலை மாற்ற பெரிதும் உதவியாக இருக்கிறது.
இவருடைய இந்த கண்டுபிடிப்பு எளிதாக கிடைத்தது அல்ல. இதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி கடுமையானது. இதை உருவாக்குவதற்காக பாராட்டு பெறுவதற்குப் பதிலாக அவமானம்தான் அடைந்தார். ஒரு கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தினருடைய வெறுப்பு, மனைவியின் சந்தேகம் ஆகியவற்றையும் சம்பாதித்தார். அவரை பைத்தியக்காரன் என்று ஊர் எள்ளி நகையாடியது. பல போராட்டங்களைச் சந்தித்த அவர், மனம் தளராமல் தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் இந்த மலிவான சானிட்டரி நாப்கினை தயாரித்து வெற்றி கண்டார்.
இவரது இந்த சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இவருடைய பெயரையும் இணைத்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அவருடைய நாப்கின்களை அரசே சுய மகளிர் அமைப்புக்கள் மூலம் ஏழை எளிய மக்களைச் சென்றடைய வழியமைத்தது.
இவ்வாறு சாதனை படைத்த ஒரு தமிழனின் வாழ்க்கை திரைப்படமாக வெளியாகவுள்ளது. அத்திரைப்படத்தின் பெயர் ‘பேட்மேன்’ ஆகும். இப்படத்தில் முருகானந்தம் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமாரும், அவருடைய மனைவியின் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இயக்கப் போவது பட இயக்குநர் பால்கி ஆவார்.