March 10, 2017 தண்டோரா குழு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம் அணியின் சார்பில் அதிமுக கட்சி அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது. ஒ. பன்னீர் செல்வம் தலைமையில் தனி அணியாகவும், சிறையில் உள்ள சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்படுகிறது. இவர்களைத் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டு வருகிறார். ஆனால், அவர் தனியாக ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளதால், அவர் அண்ணா திமுக என்ற அணியின் கீழ் வரமாட்டார்.
ஜெயலலிதா போட்டியிட்டு ஜெயித்த ஆர்.கே. நகர் தொகுதியில் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் போட்டியிட திமுக, தீபா, சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி ஆகியவை போட்டியிடுகின்றன.
அத்தொகுதியில் தான் களமிறங்கவுள்ளதாக தீபா ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். மற்ற அணிகளின் வேட்பாளர்கள் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவருடைய தொகுதியிலும், அதிமுக மத்தியிலும் நன்கு அறிமுகமானவர். அவரையே ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக நிறுத்த ஓ. பன்னீர் செல்வம் அணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.