March 10, 2017
தண்டோரா குழு
கோவையில் நடந்த சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த கூலித் தொழிலாளி தங்கராஜ் என்பவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கராஜ் (வயது 55). கடந்த மார்ச் 4-ம் தேதி கோவை அருகே பாப்பம்படி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் மார்ச் 9-ம் தேதி மூளை சாவடைந்தார்.இதனால் தங்கராஜின் உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது இதயம், சிறுநீரகங்கள், தோல், கண்கள் ஆகியவற்றைத் தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதயம் கோவையிலிருந்து சென்னையில் உள்ள போர்டீஸ் மலர் மருத்துவமனைக்கு விமானம் மூலமாக புதன்கிழமை எடுத்து செல்லப்பட்டது, அவரது தோல் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது.
“இந்த உடலுறுப்பு தானம் மூலம் தங்கராஜ் மற்றவர்கள் மனத்திலும் உடலிலும் உயிர் வாழ்கிறார்” என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.