March 11, 2017 தண்டோரா குழு
இலங்கை சிறையில் இருந்த 85 இந்திய மீனவர்களை இலங்கை அரசு வெள்ளிக்கிழமை (மார்ச் 1௦) விடுதலை செய்துள்ளது.
மார்ச் 6-ம் தேதி, கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 22 வயது பிரிட்ஜோ என்பவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இலங்கையின் தலைநகர் கொழும்பில் உயர்நிலை பேச்சுவார்த்தை புதன்கிழமை (மார்ச் 8) நடைபெற்றது. அதன் முடிவில், இந்திய மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டதால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கும் வகையில், இந்திய மற்றும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படியில், தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த 85 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் நாடு திருப்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் இருந்த 85 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்” என்று மீன்வள அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.