March 11, 2017 தண்டோரா குழு
தலைநகர் தில்லியில் விபத்தில் சிக்கி காயமடைபவர்களுக்கு முற்றிலும் இலவசமான சிகிச்சையை பிரதேச அரசு அளிக்கும் என்று தில்லி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.
லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் தில்லி அரசு மருத்துவமனையில் புதிய வென்டிலேட்டர் இயந்திரங்களின் செயல்பாடுகளைச் சனிக்கிழமை தொடங்கிவைத்த அவர்,
“தில்லி பிரதேச எல்லைக்குள் யாராவது விபத்தில் சிக்கி, காயமடைந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலோ அரசு மருத்துவமனையிலோ எங்கு சேர்க்கப்பட்டாலும் அவருக்கு உரிய சிகிச்சைச் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும். விபத்தில் சிக்கியவர் பணம் தர வேண்டியதில்லை” என்றார்.
லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை உள்பட பிரதேச அரசு மருத்துவமனைகளில் புதிதாக125 வென்டிலேட்டர் இயந்திரங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் மூச்சுத் திணறலுக்கு ஆளானால், அவர்களது உயிரைக் காப்பாற்ற இந்த இயந்திரங்கள் பெரிதும் உதவும்.
இதைப் போல் சில தினங்களுக்கு முன் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் அமைச்சர். அதில் ஏதாவது ஓர் அரசு மருத்துவமனை அனுப்பும் நோயாளிகளுக்கு 21 தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக நோய் கண்டறியும் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.