March 11, 2017 தண்டோரா குழு
பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதியது. பேருந்தில் பயணித்த ஓட்டுநர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து புனே காவல் துறையினர் சனிக்கிழமை கூறியதாவது:
“மகாராஷ்டிர மாநிலம் கோரேகாம் கிராமம் அருகே புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சோலாப்பூர் பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த சரக்கு லாரி மீது எதிர்பாராமல் அந்த பஸ் மோதியது.
விசாரணையில், சாலையின் குறுக்கே ஓடிய பன்றியின் மீது மோதாமல் இருக்க அந்த பேருந்து சிறிது வலப்புறம் திரும்பியது. அப்போது, எதிர்ப் பக்கம் வந்த லாரி மீது மோதியது. அந்த விபத்தில் பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவரும் பயணிகள் 10 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்தில் பலியான பயணிகள் சோலாப்பூர் மாவட்டம் அக்கல்கொட் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர் என்பது தெரியவந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மும்பை முலந்த் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள்: விஜய் கேல், ஜோதி கேல், யோகேஷ் லோகாந்தே, ஜெயவந்த் சவாண், யோகித்தா சவாண், ரேவதி சவாண், ஜக்தீஷ் பண்டிட், ஷைலஜா பண்டிட். இவர்கள் மும்பை முலந்த் பகுதியைச் சேர்ந்தவர்கள். பிரதீப் அவசத், சுலபா அவசத் ஆகியோர் புனே மாவட்டம் ஜுன்னர் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். பஸ் ஓட்டுநர் பெயர் கேதன் பவார்.