March 13, 2017
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளின் முன் தி.மு.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் உள்ள ஏரியைச் சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்திற்கு தேவையான 20 ஆயிரம் டன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து நியாயவிலைக் கடைப் பொருட்களும் ஏழை, எளிய மக்களுக்குக் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் முன் தி.மு.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது.
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன ‘ என்றார் எடப்பாடி பழனிசாமி.