March 13, 2017 findmytemple.com
சுவாமி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
அம்பாள் : வள்ளி,தெய்வானை
தீர்த்தம் : நூபுர கங்கை
தலவிருட்சம் : நாவல்
தலச்சிறப்பு : அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை (அ) பழமுதிர்சோலை. தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். “அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே” என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.
தல வரலாறு : அவ்வைக்கிழவியிடம்,” சுட்ட பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?,” என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர்.
முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, “”என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?” என்றான். சந்தோஷப்பட்ட பாட்டி “”வேண்டும்”என்றார்.உடனே முருகன்,””பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?”என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,””சுட்ட பழத்தையே கொடேன்”என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான்.
நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,””பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்”என்று கூறி சிரித்தான். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர்.
நடைதிறப்பு : காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் : தமிழ்வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம்,திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.
அருகிலுள்ள நகரம் : மதுரை
கோயில் முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை(பழமுதிர்ச்சோலை), அழகர்கோவில்- 625301. மதுரை மாவட்டம்.