March 13, 2017
தண்டோரா குழு
கூலிப்படைகள் மூலம் தனக்கு மிரட்டல் வருவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திங்கள்கிழமை (மார்ச் 13) திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருடைய அண்ணன் மகள் தீபா “எம்.ஜிஆர். அம்மா தீபா பேரவை” என்னும் புதிய அமைப்பைத் தொடங்கி, அதன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆர்.கே. நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் இடைதேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி அருகில் ஞாயிற்றுக்கிழமை அமர்ந்து தியானம் செய்தார்.
பின்னர், “நான் அரசியலுக்கு வந்தது முதல் கூலிப்படைகள் மூலம் எனக்கு மிரட்டல் வருகின்றன. நான் ஆர்.கே. நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் போடியிடுகிறேன் என்று அறிவித்த பிறகு எனக்கு மறைமுகமாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. என்னைக் கொலைசெய்து விடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் யாரென்றே தெரியவில்லை. ஆனால், இதற்கெல்லாம் நான் பயப்படபோவதில்லை” என்றார்.