March 13, 2017 தண்டோரா குழு
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷுவி என்ற ஊரில் உள்ள விடுதியில் நடந்த தற்கொலை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
மொகடிஷு நகரில் உள்ள பரபரப்பான மாகா அலுமூகார் ராமாஹ் சாலையில் வெஹிலியே விடுதி அமைந்துள்ளது. அந்நாட்டின் உயர் அதிகாரிகள் அந்த விடுதியின் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கேப்டன் முஹம்மாத் ஹுசைன் கூறுகையில், “அந்த விடுதியை நோக்கி தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் காரில் வேகமாக வந்து தாக்குதல் நடத்தினர்.
அதில் 6 பேர் அங்கேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் சேவை சம்பவ இடத்திற்கு விரைந்தது. காயமடைந்த 4 பேர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்த 6 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன” என்றார்.
இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுபேற்கவில்லை. மொகடிஷு நகரிலுள்ள விடுதிகளை அல்-கெய்தாவுடன் இணைந்த மதத் தீவிரவாத குழுவான அல்-ஷபாப் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜனவரி மாதத்தில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கும்.
தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் இருந்த அதன் ஆதிக்கத்தை முறியடித்த பிறகும், இந்த தீவிரவாத அமைப்பு நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்திக்கொண்டு வருகிறது. சோமாலியா பாதுகாப்பு படை மற்றும் சர்வதேச ஆப்பிரிக்க ஒன்றியப் படைகளின் சோதனைச் சாவடிகள், ராணுவத் தளங்களைக் குறி வைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
சோமாலியா நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள முஹம்மத் அப்துல்லாஹி முஹம்மத்துக்குப் பெரிய சவாலாக அல்-ஷபாப் அமைப்பு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு முன்னுரிமை தந்து, நாட்டின் தலைநகருக்கு வெளியே கட்டுப்பாட்டை அதிகரிக்க அந்நாட்டின் மத்திய அரசாங்கம் முற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.