March 14, 2017
தண்டோரா குழு
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை.
தேசிய நிலநடுக்கம் பற்றிய ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “நிக்கோபர் தீவுகளின் பூமிக்கடியில் 1௦ கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு, செவ்வாய்க்கிழமை காலை 8.21 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவு கோலாகப் பதிவாகியுள்ளது. சுனாமி ஏற்படும் அளவிற்கும் இந்த நிலநடுக்கம் பயங்கரமானதல்ல. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்தோ பொருட்சேதம் குறித்தோ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை” என்று தெரிவித்தது.
அதே போல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா என்னும் இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.48 மணிக்கு 3.6 ரிக்டர் அளவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்படும் நேரங்களில், அண்டை மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க, எச்சரிக்கை மையத்தை இந்தியா கட்டியெழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.