March 14, 2017 தண்டோரா குழு
கோவா சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. கோவாவில் பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது.
அதற்கான மனுவில், “கோவாவில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “சட்டப் பேரவையின் மூத்த உறுப்பினரை கோவா சட்டப் பேரவைத் தலைவராக உச்ச நீதிமன்றம் நியமிக்கும். அதன் பின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். கோவா சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.” என்றது.
கோவா சட்டப் பேரவைக்குத் தற்போது நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க. 13 இடங்களிலும் மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.