March 14, 2017 தண்டோரா குழு
சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்த கார்டை கொடுத்தபோது, 4௦ ரூபாய்க்கு பதில் 4 லட்சம் ரூபாய் பெறுவதற்கு அட்டையைத் தேய்த்திருக்கிறார் சாவடிப் பணியாளர். இச்சம்பவம் அட்டை கொடுத்து கட்டணம் செலுத்திய டாக்டருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உடுப்பி அமைந்துள்ளது. உடுப்பி நகருக்கு அருகேயுள்ள கொச்சி-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவர் ராவ் தன்னுடைய காரில் பயணம் செய்தார்.
மும்பைக்கு காரில் புறப்பட்ட அவர் உடுப்பிக்கு 18 கி.மீ. தொலைவில் உள்ள குண்ட்மி சுங்கச் சாவடிக்கு சனிக்கிழமை (மார்ச் 11) இரவு 1௦.3௦ மணியளவில் வந்துள்ளார். காரை நிறுத்திவிட்டு பணம் செலுத்த தன்னுடைய டெபிட் கார்டை சுங்கச் சாவடி உதவியாளரிடம் தந்துள்ளார். அப்போது, 4௦ ரூபாய்க்கு பதில் 4 லட்சம் ரூபாயை சுங்கச் சாவடி உதவியாளர் “ஸ்வைப்” செய்துள்ளார்.
ராவின் கைபேசியில் 4 லட்சம் ரூபாய்க்கு ஸ்வைப் செய்துள்ளதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இது குறித்து சுங்கச் சாவடி உதவியாளரிடம் கேட்டபோது,
அந்த தவற்றை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. உடனே அந்த டாக்டர் சுங்கச் சாவடி ஊழியர்கள் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றார். இரண்டு மணி நேரம் தன்னுடைய பணத்தைத் திரும்பிப் பெற இயலவில்லை.
உடனே, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டா நகரின் காவல் நிலையத்திற்கு நள்ளிரவு 1 மணிக்குச் சென்று புகார் தந்துள்ளார். அவருடைய புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், அவருடன் தலைமைக் காவலர் ஒருவர் வந்து சுங்கச் சாவடி அதிகாரிகளுடன் பேசினார்.
இறுதியாக, அந்த சுங்கச் சாவடி உதவியாளர் தன்னுடைய தவற்றை ஒத்துக் கொண்டார். அந்த தொகையைக் காசோலையாகத் தருவதாக சுங்கச்சாவடி மேல் அதிகாரிகள் கூறியபோது, அதை ஏற்க மறுத்த டாக்டர் ராவ் தனக்குப் பணமாகத் தரவேண்டும் என வலியுறுத்தினார். அதையடுத்து அந்த உதவியாளர் தன்னுடைய மூத்த அதிகாரிகள் தொடர்புகொண்டு 3,99,96௦ ரூபாயைப் பணமாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) அதிகாலை 4 மணியளவில் அவரிடம் திருப்பி அளித்தனர்.அந்தச் சுங்கச் சாவடியில் நாளொன்றுக்கு சுமார் 8 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.