March 23, 2017 findmytemple.com
சுவாமி : வைத்தியநாத சுவாமி.
அம்பாள் : அசனாம்பிகை.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு :
இந்தத் தலத்தில் நோய் தீர்க்கும் மருத்துவராக அருள்வதால், சிவனாருக்கு வைத்தியநாதர் என்று திருநாமம். இறைவி அசனாம்பிகை. ஒருகாலத்தில் இந்தப் பகுதி வேங்கை மரம் சூழ்ந்த இடமாகத் திகழ்ந்ததால், வேங்கைவனம் எனப்பட்டது. வேங்கை மரம் என்பது வெற்றிக்கு உகந்த மரம் எனப் போற்றுகின்றனர், முனிவர்கள். எனவே, இந்தத் தலத்து நாயகிக்கு வேங்கவன நாயகி என்றும் ஒரு பெயர் அமைந்ததாம். இத்தனைப் பெருமைகளை அறிந்த மன்னர்கள், இந்தக் கோயிலைக் கட்டி ஏராளமான திருப்பணிகளைச் செய்துள்ளனர். தீராத நோயால் அவதிப்படுவார்கள், செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் கிடைக்காதா என்று ஏங்கிக் கலங்குபவர்கள் இங்கு வந்து வைத்தியநாதரையும், அசனாம்பிகையையும் தரிசித்துப் பிராத்தனை செய்தால், பிணிகள் யாவும் அகலும் மற்றும் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்! வசிஷ்டர் தங்கியிருந்து தவம் செய்த இத்தலம், ஆதிகாலத்தில் திருவசிட்டபுரி என அழைக்கப்பட்டது. பிறகு, வசிட்டக்குடி என மாறி, பின்னாளில் அதுவே திட்டக்குடி என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
தல வரலாறு :
ஒரு முறை கவுத முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான் இந்திரன். அங்கு அவருடைய பதிவிரதையான அகலிகை மீது ஆசை கொண்டான். குருவின் மனைவியை அவன் அடைய நினைத்தது, மிகப்பெரிய கேட்டினை அவனுக்குத் தந்துவிட்டது! ஓர் அதிகாலை நேரத்தில், அன்றைய தினத்து அனுஷ்டானங்களை நிறைவேற்றுவதற்காக, முற்றும் துறந்த கவுதம முனிவர் ஆற்றங்கரைக்குச் சென்று விட்டார். இதைக் கண்ட இந்திரன் கவுதம முனிவரின் தோற்றத்தில் அவரது ஆசிரமத்திற்குச் சென்றான். இதை ஞானதிருஷ்டியால் கவுதமர் உணர்ந்து விட்டார். ஆசிரமத்தை அவர் திரும்பி அடைந்த போது கவுதமர் உருவில் இருந்த இந்திரன், அவரது கண்ணில் படாவண்ணம் பூனையாக மாறினான். இதை அறிந்த கவுதமர், ஞானக்கண் திறக்கும் ஆசானுக்கு நீ தருகிற குருதட்சிணை இதுதானா? சீச்சீ… உன்னுடைய கண்களில் கொப்பளித்துக் கிடக்கிற காமம், நீ எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதை உணர்த்துகிறது. மாற்றான் மனைவி மீது ஆசைப்படுகிற உன்னை உலகத்துக்கே தெரியப்படுத்த வேண்டும். உன் அங்கம் முழுவதும் கண்களாகக் கடவது! என்று கடும் கோபத்துடன் சாபமிட்டார். அவன் கைகளில், கழுத்தில், தலையில், நெஞ்சில், வயிற்றில் என ஆயிரக்கணக்கான கண்கள் காட்சி அளித்தன. கலங்கிப்போனான் இந்திரன். இந்தச் சாபத்தில் இருந்து விமோசனம் தாருங்கள், குருவே! என்று கண்ணீர் விட்டு வேண்டினான்.
அவனுடைய உடலில் இருந்த அத்தனைக் கண்களில் இருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்தது. நெற்றிக் கண்ணைக் கொண்டு உலகைக் காணும் சிவபெருமானால் மட்டும்தான், உமக்கு விமோசனம் அளிக்க முடியும் என்று இந்திரனிடம் சொன்ன கவுதம முனிவர், அகலிகையையும் கல்லாகக் கடவது என்று சாபமிட்டார். எவ்வளவு பெரிய பாவியாகிப் போனேன்! இந்தச் சாபத்தில் இருந்து விமோசனம் தாருங்கள் என் சிவனாரே! என்று, பூவுலகில் உள்ள ஒவ்வொரு தலத்துக்கும் சென்று வழிபட்டான் இந்திரன். வசிஷ்ட முனிவர் பன்னெடுங்காலம் பர்ணசாலை அமைத்து தவம் செய்த திருத்தலத்தை வந்தடைந்தான். தேகம் முழுவதும் கண்களைப் பெற்றதுடன், தீராத நோயையும் சாபமாகப் பெற்றிருந்தவன் அங்கே உள்ள சிவனாரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டு வந்தான். நீண்ட தவத்துக்குப் பிறகு இந்திரனுக்கு மனம் இரங்கினார் சிவபெருமான். அவனுக்குத் திருக்காட்சி தந்ததுடன், அவனது சாபத்தையும் போக்கி, வரம் அருளினார். அப்போது, என்னைப் போல் பாவம் செய்தும் நோய்களால் அவதிப்பட்டும் அல்லல்படும் மாந்தர்கள், இங்கே இந்தத் தலத்துக்கு வந்தால், அவர்களுக்கும் அருள வேண்டும் என சிவனாரிடம் வேண்டுகோள் வைத்தான் இந்திரன். அப்படியே ஆகட்டும் என அருளினார் சிவபெருமான். இந்திரனிடம் சொன்னபடி, இன்றைக்கும் தன்னை நாடி வரும் அன்பர்கள் அனைவரது பாவங்களையும் போக்கி அருள்கிறார், அவர்களின் தீராத நோய்களையும் தீர்த்து அருள்கிறார் சிவபெருமான்.
நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் மணி 9.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
பிரதோஷம்,
சிவராத்திரி.
அருகிலுள்ள நகரம் : திட்டக்குடி.
கோயில் முகவரி : அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்,திட்டக்குடி- 606 106, கடலூர் மாவட்டம்.