March 23, 2017 தண்டோரா குழு
கோவையில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று பேரையும் வெள்ளிக்கிழமை(மார்ச் 24) மாலை ஐந்து மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.
கோவையில் கடந்த 16-ம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் என்பவரை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இது தொடர்பாக அன்சர்த்,சதாம் உசேன்,சம்சூதீன் ஆகிய மூன்று பேர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அதன் பின் பாரூக் கொலை தொடர்பாக அப்துல் முனாப்,அக்ரம் ஜிந்தா, ஜாபர் அலி ஆகியோர் சில தினங்களுக்கு முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த அன்சர்த், சதாம் உசேன்,சம்சூதீன் ஆகிய மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்த காவல்துறையினர் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நேற்று (மார்ச் 22) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணைக்கு சரணடைந்தவர்களின் வழக்கறிஞர் மறுத்ததால் அவர்கள் மீண்டும் இன்று(மார்ச் 23) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் , மூவரையும் கோவை பெரியகடைவீதி காவல்துறையினர் நாளை(மார்ச் 24) மாலை ஐந்து மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரையும் பெரியகடை வீதி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.