March 24, 2017 தண்டோரா குழு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 82 வேட்பு மனுக்கள் ஏற்கபட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலில் வாக்குசீட்டு முறை பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆர்.கே நகர் தொகுதி காலியாக உள்ளது. இத்தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன், ஒபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், ஜெ அண்ணன் மகள் தீபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகனாதன், தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜக சார்பாக கங்கை அமரன் உள்ளிட்ட 127 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யபட்டது. இதில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 82 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. முறையாக இல்லாத 45 வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட 82 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் வாக்கு இயந்திரம் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படியே பயன்படுத்தினால் 4 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதன் காரணமாக வாக்குசீட்டு முறை இந்த இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.